உண்டோ சடகோபர்க்கு ஒப்பு

நீண்ட தமிழ் பதிவு .. முகநூலில் என்னுடைய முதல் பதிவும் கூட. 
இந்தப் பதிவு எழுத ஆரம்பித்து பாதி முடிந்த பிறகு என்னை ஓரு பயம் சூழ்ந்து கொண்டது. நம்மாழ்வார் எவ்வளவு பெரியவர் அவரைப் பற்றி நாம் எழுதுவதா என்று! இருந்தாலும் கடவுள் மேல் பாரத்தைப் போட்டு எழுதி முடித்து விட்டேன்.
யாமறிந்த புலவரிலே வள்ளுவன் போல் கம்பனைப் போல் இளங்கோவைப் போல் யாங்கனுமே கண்டதில்லை .. நமக்குத் தெரிந்த வரிகள். இது சடகோபரைப் (நம்மாழ்வார்) போல் என்று தொடங்கி இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
நான் நம்மாழ்வார் என்கிற சடகோபரைப் பற்றி முழுதாய் அவருடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசுரங்களைப் படித்து இன்னும் ஆராயவில்லை. நான் படித்த சிலவற்றுள் அதற்கு முன்னோர்கள் எழுதி வைத்த விளக்கங்களில் இருந்து சிலவற்றை படித்ததில் எனக்கு எட்டிய அளவில் சொல்கிறேன்.
வேதத்தை தமிழ்ப்படுத்தி என்னை மனம் கவர்ந்த ஈசனாம் திருமாலை மட்டுமே போற்றும் பாடல்கள் இவை என்பதை சில நிமிடங்கள் அப்புறப்படுத்தி வைத்து அப்பாடல்களில் பொதிந்திருக்கும் ஆழ்ந்த தத்துவப் பொருட்களையும் சிறிது நேரம் ஆராயாமல் அவற்றிலுள்ள தமிழை மட்டும் கொஞ்சம் பார்ப்போம்.
திருவிருத்தம் பாசுரங்களில் மாலையை வருணித்து வரும் சில உவமைகள்
1. வால்வெண்ணிலவு உலகாரச் சுரக்கும் வெண்திங்களென்னும்,
பால்விண் சுரவி சுரமுதிர் மாலை
பொருள்:
விண்ணில் இருக்கும் நிலவு என்கிற பசுவானது அழகிய வெண்மையான நிலவொளியை உலகம் எங்கும் நிறைக்கும் மாலைப் பொழுது
2. திங்களம்பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசுபட்ட
செங்களம் பற்றி நின்றெள்குபுன் மாலை
பொருள்:
சந்திரன் என்ற அழகிய பிள்ளை (தந்தயை இழந்து) தனிப்பட, உலகெங்கும் சிவந்த ஒளியைப் பரப்பும் சூரியன் என்கிற தன் தலைவன் மறைந்த செவ்வானம் ஆகிய போர்க்களத்தை அடைந்து மாலை என்னும் பெண் வருத்தத்தோடு நின்றாள்
3. சீரரசாண்டுதன் செங்கோல் சிலநாள் செலீஇக்கழித்த,
பாரரசொத்து மறைந்தது ஞாயிறு
பொருள்:
சிறப்பாக நீதி தவறாமல் அரசாண்டு தன் பதவிக் காலம் முடிந்த அரசனைப் போல் சூரியன் அஸ்தமித்தது
4. காரேற்றிருள் செகிலேற்றின் சுடருக்குளைந்து, வெல்வான்
போரேற்றெதிர்ந்தது புன்தலை மாலை
பொருள்:
கருத்த இருளாகிய எருது சிவந்த சூரியன் என்னும் எருதை வெல்லும் பொருட்டு போர் செய்ய எதிர்த்து நின்றது
என்ன அழகான எவ்வளவு வித விதமான உவமைகள் எப்பேற்பட்ட தமிழ்!
இது போல் தலைவியின் கண்களை வருணித்து பல உவமைகள் .. இன்னும் பல பல .. இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.
உண்டோ சடகோபர்க்கு ஒப்பு?

Comments

Popular posts from this blog

Lost in Books - Just back from Blandings!

Krishna nee begane baaro …

From Dadagiri to Gandhigiri