பொய்கை ஆழ்வார் - 1
ஆழ்வார்களுள் முதலாழ்வார்கள் என்று முவர் அழைக்கப் பட்டாலும் அவர்களுள் முதலானவர் பொய்கை ஆழ்வார்.
பொய்கை ஆழ்வார் தம் முதல் திருவந்தாதியில் சில பாசுரங்களில் சுவையான வினாக்களை எழுப்பி சில முரண்பாட்டுக்களையும் சுட்டிக் காட்டுகிறார். இவை ஆழ்வார் ஐயத்தால் எழுப்பியது போல் முதல் பார்வையில் தோன்றினாலும் ஆழ்ந்து பார்க்கையில் அவருடைய தேடலும் அவர் பெருமானையும் அவர் அவதாரங்களையும் நன்கு அனுபவித்ததும் தெரியும். பெருமான் ஒரு வரையறைக்குள் அடங்காதவன் என்பதும் பல அமாநுஷ்யமான சேஷ்டிதங்களைச் செய்து தன் பரத்துவத்தை சாதித்தவன் என்பதுமே மேலோட்டமாக ஆழ்வார் சொல்ல வந்தது.
மேலே சில பாசுரங்களை ஒவ்வொன்றாக அனுபவிப்போம்
பாசுரம் # 9
பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு,
அன்று உன் ஒரு கோட்டின் மேல்கிடந்ததன்றே, -
விரிதோட்ட சேவடியை நீட்டித் திசை நடுங்க
விண்துளங்க, மாவடிவில் நீயளந்த மண்?
இதில் வராக அவதாரத்தையும் திருவிக்கிரம அவதாரத்தையும் ஆழ்வார் அனுபவிக்கிறார்
அதாவது திருவிக்கிரமனாய் மிகப் பெரிய வடிவு கொண்டு திருவடியை நீட்டி அளந்த அதே உலகம் வராஹ அவதார காலத்தில் உனது திருஎயிற்றிலே ஒரு சிறு மணி போலக் கிடந்ததே என்கிறார்.
இப்படித் தான் தன் பக்தர்களைக் காப்பாற்றுவான் என்று அவனுக்கு ஒரு நியதில்லை என்றும் இங்கே பொருள் உண்டு என்று பூர்வாச்சாரியர்கள் இதற்கு அழகான விளக்கம் தந்துள்ளனர்.
பாசுரம் # 2
என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீரேற்றது,
ஒன்றும் அதனை உணரேன் நான் - அன்று
அது அடைத்து உடைத்துக் கண்படுத்த ஆழி,
இது நீ படைத்து இடந்து உண்டுமிழ்ந்த பார்
இதன் பொருள் - அமரர்களுக்காக கடல் கடைந்து அமுதம் தந்த பெருமானே, இராமனாய் கடலின் மீது பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று, பின் வெற்றி பெற்று திரும்பும் போது அந்தப் பாலத்தை இடித்தவன்?
தான் படைத்த உலகத்தையே தானே, அவன் நீரேற்று வாமனனாய் பெற்றதும், வராஹ அவதாரத்தில் தன் திருஎயிற்றிலே ஏந்தி மீட்டதும், பிரளய காலத்தில் உண்டு காத்ததும் பின் உமிழ்ந்ததும்?
தான் இந்நிகழ்வுகளை நேரில் காணா வருத்தத்தை ஒரு புறம் கூறினாலும், தன் பக்தியால் அனைத்து நிகழ்வுகளையும் அடுத்தடுத்து கண் முன்னே பார்க்கின்றது போல் இதே பாசுரத்தில் ஆழ்வார் தெரிவிப்பது அருமை.
Comments