வாமனனின் நடை

 *வாமனனின் நடை*


இன்று வாமன ஜெயந்தி. வாமனனை ஆழ்வார்கள் அனுபவித்த சில பாசுரங்களை கீழே நாமும் அனுபவிப்போம்.


திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமடலில் வாமன அவதாரத்து நிகழ்வுகளை நம் கண் முன்னே அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார். தன் உருவத்தை மாற்றிக் கொண்டு தான் யார் என்பதை மறைக்க தன் நடை உடை பாவனையையும் மாற்றிக் கொண்டு தன்னுடைய சொத்தான உலகத்தையே பெருமான் யாசித்துப் பெற்றது எத்தனை அழகு. மாவலி நம்பும் வண்ணம் வஞ்சித்து நெஞ்சுருக்கி நடந்து வந்தாராம். என்ன அழகான தமிழ்!


மற்றன்றியும், தன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர், மன்னும் குறளுருவின் மாணியாய், - மாவலிதன் பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர் மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி, என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண், மன்னா தரு கென்று வாய்திறப்ப, - மற்றவனும் என்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண் மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த பொன்னார் கனைகழற் கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங் கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து, தன்னுலகம் ஆக்குவித்த தாளானை


நாச்சியார் திருமொழியில் திருவரங்கனுக்காக பத்து பாசுரங்கள் பாடிய ஆண்டாள் அதில் பெருமான் அவதாரங்களையும் இணைத்து பாடியுள்ளாள். அதில் வாமனர் பற்றி மட்டுமே மூன்று பாடல்கள் பாடியது குறிப்பிடத் தக்கது. அதில் முதல் பாட்டில் அதே நடையை ஆண்டாள் குறிப்பிடுவது இன்னும் அழகு. 

பெருமான் தன் கை வளையைக் கவர்ந்து கொண்டது பற்றி தோழிகளோடு உரையாடுவது போல் இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன. 

மாவலியிடம் வாங்கிக் கொண்ட பிச்சையில் குறையுண்டாகி அக்குறையை என் கையாலே தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று என் கைவளையிலே ஆசையுடையவராகில் இந்த அரங்கர் அன்று அங்கு நடந்த நடையை இத்தெருவில் என் கண் முன்னே நடந்து காட்ட வேண்டாமோ? என்று கேட்கிறாள்.


மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்

பச்சைப் பசுந்தேவர் தாம் பண்டு நீரேற்ற

பிச்சைக் குறையாகி என்னுடைய பெய்வளைமேல்

இச்சை உடையரேல் இத்தெருவே போதாரே


அடுத்த இரண்டு பாடல்களில் தன் கைவளை மட்டுமின்றி ஆத்மாவையும் எடுத்துக் கொண்டார் என்கிறாள். இதில் பொல்லாக் குறள் உருவாய் என்று குறிப்பிட்டது மிகவும் சுவை ஆனது. இது ஆண்டாளுக்கே உண்டான தனி பாணி.


பொல்லாக் குறளுருவாய்ப் பொற் கையில் நீரேற்று

எல்லாவுலகும் அளந்து கொண்ட எம்பெருமான்

நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்

இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்துளனே


கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர்

செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்

எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது நான்மறையின்

சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே


பொய்கை ஆழ்வாரோ இதை வேறு கோணத்தில் பார்க்கிறார். தன்னுடையது அல்லாத உலகத்தைத் தன்னதென்று நினைத்துக் கொண்டு செருக்கு கொண்டவன் மாவலி.  அவனைக் கொல்லாமல் தன் உலகத்தை அவனது போலவே பாவித்துச் சென்று யாசித்து பெற்ற மஹா குணம் பொருந்தியவன் எம்பெருமான். இப்படிப்பட்ட மஹா குணத்தில் ஈடுபடாமல் அவனை இந்த உலகம் பழிக்கின்றதே என்று வருந்துகிறார்


கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்,

மண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை

நீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில்

ஆரங்கை தோய அடுத்து?

Comments

Popular posts from this blog

Lost in Books - Just back from Blandings!

Chennai Music season 2024 - Sriranjani's Sriranjani

Krishna nee begane baaro …