உண்டோ சடகோபர்க்கு ஒப்பு
நீண்ட தமிழ் பதிவு .. முகநூலில் என்னுடைய முதல் பதிவும் கூட. இந்தப் பதிவு எழுத ஆரம்பித்து பாதி முடிந்த பிறகு என்னை ஓரு பயம் சூழ்ந்து கொண்டது. நம்மாழ்வார் எவ்வளவு பெரியவர் அவரைப் பற்றி நாம் எழுதுவதா என்று! இருந்தாலும் கடவுள் மேல் பாரத்தைப் போட்டு எழுதி முடித்து விட்டேன். யாமறிந்த புலவரிலே வள்ளுவன் போல் கம்பனைப் போல் இளங்கோவைப் போல் யாங்கனுமே கண்டதில்லை .. நமக்குத் தெரிந்த வரிகள். இது சடகோபரைப் (நம்மாழ்வார்) போல் என்று தொடங்கி இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. நான் நம்மாழ்வார் என்கிற சடகோபரைப் பற்றி முழுதாய் அவருடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசுரங்களைப் படித்து இன்னும் ஆராயவில்லை. நான் படித்த சிலவற்றுள் அதற்கு முன்னோர்கள் எழுதி வைத்த விளக்கங்களில் இருந்து சிலவற்றை படித்ததில் எனக்கு எட்டிய அளவில் சொல்கிறேன். வேதத்தை தமிழ்ப்படுத்தி என்னை மனம் கவர்ந்த ஈசனாம் திருமாலை மட்டுமே போற்றும் பாடல்கள் இவை என்பதை சில நிமிடங்கள் அப்புறப்படுத்தி வைத்து அப்பாடல்களில் பொதிந்திருக்கும் ஆழ்ந்த தத்துவப் பொருட்களையும் சிறிது நேரம் ஆராயாமல் அவற்றிலுள்ள தமிழை மட்டும் கொஞ்சம் பார்ப்போம்....