Posts

Showing posts from August, 2020

வாமனனின் நடை

 *வாமனனின் நடை* இன்று வாமன ஜெயந்தி. வாமனனை ஆழ்வார்கள் அனுபவித்த சில பாசுரங்களை கீழே நாமும் அனுபவிப்போம். திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமடலில் வாமன அவதாரத்து நிகழ்வுகளை நம் கண் முன்னே அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார். தன் உருவத்தை மாற்றிக் கொண்டு தான் யார் என்பதை மறைக்க தன் நடை உடை பாவனையையும் மாற்றிக் கொண்டு தன்னுடைய சொத்தான உலகத்தையே பெருமான் யாசித்துப் பெற்றது எத்தனை அழகு. மாவலி நம்பும் வண்ணம் வஞ்சித்து நெஞ்சுருக்கி நடந்து வந்தாராம். என்ன அழகான தமிழ்! மற்றன்றியும், தன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர், மன்னும் குறளுருவின் மாணியாய், - மாவலிதன் பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர் மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி, என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண், மன்னா தரு கென்று வாய்திறப்ப, - மற்றவனும் என்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண் மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த பொன்னார் கனைகழற் கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங் கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து, தன்னுலகம் ஆக்குவித்த தாளானை நாச்சியார் திருமொழியில் திருவரங்கனுக்காக பத்த...

பொய்கை ஆழ்வார் - 2

 பொய்கை ஆழ்வார் பாகம் 2 பாசுரம் # 10 மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும், விண்ணும் விழுங்கியது மெய்யென்பர் - எண்ணில் அலகளவு கண்ட சீராழியாய்க்கு,  அன்று இவ்வுலகளவும் உண்டோ உன் வாய்? இந்தப் பாசுரத்திலோ அண்டம் முழுவதும் விழுங்கிய அவன் வாய் அப்பொழுது எவ்வளவு பெரியதாய் இருந்தது என்று ஆச்சரியத்துடன் வினவுகிறார்.  அதே சமயம் எண்ணிலடங்கா கல்யாண குணங்களை உடைய கருணைக் கடலான எம்பெருமான் சிறிய வாயினாலே பெரிய உலகங்களை எல்லாம் எளிதில் விழுங்க வல்ல அபார சக்தி கொண்டவன் என்பதே கருத்து. இதில் இன்னும் ஒரு படி மேலே போய் கீழ் வரும் பாசுரத்தில் மண்ணை உண்டவன் வயிறு எப்படி யசோதை தந்த வெண்ணை உண்டு நிறைந்தது என்று கேட்கிறார். இங்கே அவன் பெருமைக்கு எதுவும் ஈடாகாது ஆனால் பக்தர்களுக்காகத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு வெண்ணை திருடுதல் போன்றன செய்து அவர்களோடு தன்னை சம்பந்தப் படுத்திக் கொள்கிறான் என்றே கொள்ள வேண்டும். பாசுரம் # 92 வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய் தேனாகிப் பாலாம் திருமாலே, - ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள் மண்ணை உமிழ்ந்த வயிறு. முத்தாய்ப்பாக அதே சேஷ்டிதத்தைப் பற்றி இந்தப...

பொய்கை ஆழ்வார் - 1

 ஆழ்வார்களுள் முதலாழ்வார்கள் என்று முவர் அழைக்கப் பட்டாலும் அவர்களுள் முதலானவர் பொய்கை ஆழ்வார். பொய்கை ஆழ்வார் தம் முதல் திருவந்தாதியில் சில பாசுரங்களில் சுவையான வினாக்களை எழுப்பி சில முரண்பாட்டுக்களையும் சுட்டிக் காட்டுகிறார். இவை ஆழ்வார் ஐயத்தால் எழுப்பியது போல் முதல் பார்வையில் தோன்றினாலும் ஆழ்ந்து பார்க்கையில் அவருடைய தேடலும் அவர் பெருமானையும் அவர் அவதாரங்களையும் நன்கு அனுபவித்ததும் தெரியும். பெருமான் ஒரு வரையறைக்குள் அடங்காதவன் என்பதும் பல அமாநுஷ்யமான சேஷ்டிதங்களைச் செய்து தன் பரத்துவத்தை சாதித்தவன் என்பதுமே மேலோட்டமாக ஆழ்வார் சொல்ல வந்தது. மேலே சில பாசுரங்களை ஒவ்வொன்றாக அனுபவிப்போம் பாசுரம் # 9 பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு,  அன்று உன் ஒரு கோட்டின் மேல்கிடந்ததன்றே, -  விரிதோட்ட சேவடியை நீட்டித் திசை நடுங்க  விண்துளங்க, மாவடிவில் நீயளந்த மண்? இதில் வராக அவதாரத்தையும் திருவிக்கிரம அவதாரத்தையும் ஆழ்வார் அனுபவிக்கிறார் அதாவது திருவிக்கிரமனாய் மிகப் பெரிய வடிவு கொண்டு திருவடியை நீட்டி அளந்த அதே உலகம் வராஹ அவதார காலத்தில் உனது திருஎயிற்றிலே ஒரு சிறு மணி போல...

ஆழ்வார்கள் அனுபவம்

 ஆழ்வார்கள் அனுபவம் பற்றி எழுத வேண்டும் என்று எனக்குள்ளே சில நாட்களாக ஏதோ ஒரு உந்துதல். ஆச்சார்யர்கள் சொல்லாததோ? வைணவம் காணாததோ? இதில் எதை நீ சொல்லப் போகிறாய் என்று ஒரு குரல் நியாயமாகத் தடுத்தாலும் முயற்சியைத் தொடர்ந்தேன். முதல் கட்டுரை பொய்கை ஆழ்வாரைப் பற்றியது.