Thursday, August 27, 2020

பொய்கை ஆழ்வார் - 2

 பொய்கை ஆழ்வார் பாகம் 2

பாசுரம் # 10

மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,

விண்ணும் விழுங்கியது மெய்யென்பர் - எண்ணில்

அலகளவு கண்ட சீராழியாய்க்கு, 

அன்று இவ்வுலகளவும் உண்டோ உன் வாய்?


இந்தப் பாசுரத்திலோ அண்டம் முழுவதும் விழுங்கிய அவன் வாய் அப்பொழுது எவ்வளவு பெரியதாய் இருந்தது என்று ஆச்சரியத்துடன் வினவுகிறார். 

அதே சமயம் எண்ணிலடங்கா கல்யாண குணங்களை உடைய கருணைக் கடலான எம்பெருமான் சிறிய வாயினாலே பெரிய உலகங்களை எல்லாம் எளிதில் விழுங்க வல்ல அபார சக்தி கொண்டவன் என்பதே கருத்து.


இதில் இன்னும் ஒரு படி மேலே போய் கீழ் வரும் பாசுரத்தில் மண்ணை உண்டவன் வயிறு எப்படி யசோதை தந்த வெண்ணை உண்டு நிறைந்தது என்று கேட்கிறார். இங்கே அவன் பெருமைக்கு எதுவும் ஈடாகாது ஆனால் பக்தர்களுக்காகத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு வெண்ணை திருடுதல் போன்றன செய்து அவர்களோடு தன்னை சம்பந்தப் படுத்திக் கொள்கிறான் என்றே கொள்ள வேண்டும்.

பாசுரம் # 92


வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்

தேனாகிப் பாலாம் திருமாலே, - ஆனாய்ச்சி

வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள்

மண்ணை உமிழ்ந்த வயிறு.


முத்தாய்ப்பாக அதே சேஷ்டிதத்தைப் பற்றி இந்தப் பாசுரத்தில் இன்னொரு கேள்வி வருகிறது


பாசுரம் # 69


பாலன் தனதுருவாய் ஏழுலகுண்டு * ஆலிலையின் 

மேலன்று நீ வளர்ந்து மெய்யென்பர் * - ஆலன்று 

வேலை நீருள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ? 

சோலைசூழ் குன்றெடுத்தாய்! சொல்லு


ஏழுலகுண்டு ஆலிலையின் மேல் துயின்றது சரி அப்பொழுது அந்த ஆலிலை என்கே இருந்தது? கடலிலா? வானிலா? மண்ணிலா? யாரால் இதை விளக்க முடியும்? கோவர்த்தன மலையை எடுத்துக் குடையாகப் பிடித்த அருஞ்செயலைக் காட்டிலும் இது பெரியது அன்றோ!

No comments: